PLEASE CLICK HERE TO VIEW IN YOUR LANGUAGE

Tuesday, September 21, 2010

ஷகிலா-விஜய்-மானாட மயிலாட!

இதென்ன தலைப்பு என்று யோசிக்கிறீர்களா?   கொஞ்சம் மொக்கை மிக்ஸ் போட்டாலென்ன என்று தோன்றியதின் விளைவு ..

ஷகிலாவும் வசந்த் & கோ விளம்பரமும்....... 


          சனிக்கிழமை இரவு  தூக்கம் வராமல் டிவியை நோண்டிக்கொண்டிருந்த போது வசந்த் டிவியில் ஷகிலா நடித்த மலையாளப் படம் ஒன்று ஓடிக் கொண்டிருந்தது...  ஆஹா நல்ல படம் சிக்குச்சு என்று பார்த்துக்கொண்டிருந்தேன்.  நாயகனும்  ஷகிலாவும் பேசிக்கொண்டபடியே பெட்ரூமுக்குள் போகிறார்கள். இருவரும் பக்கத்தில் பக்கத்தில் உட்காருகிறார்கள்...  பேசியபடியே கைகள் இணைகின்றன... நாயகனின் கை நாயகியின் முகத்தை வருடுகிறது...நாயகியின் கண் சொக்குகிறது...இப்போது நெருங்கி உட்காருகிறார்கள்...நாயகன் அவளை அப்படியே கட்டிப்பிடித்து தன் முகத்தை நாயகியின் முகத்தருகே கொண்டு போகும்போது........ 

நம்பிக்கைக்கும் நாணயத்திற்கும் வசந்த் & கோ என்று விளம்பரம் வருகிறது.......

           அடங்கொய்யால விளம்பரம் போட ஒரு நேரம் காலம் கிடையாதா....?.   இப்படி இந்த நேரத்துல விளம்பரம் போட்டு வயித்தெரிச்சலை கட்டிக்கிட்டா எவன் வசந்த் & கோ கடைப்பக்கம் போவான்னு தெரியலை.....

(விளம்பரம் முடிஞ்சு பார்த்தா ரெண்டு பேரும் ரூமை விட்டு வெளியே வருகிறார்கள்.....எத்தனை பேர் சாபம் விட்டார்களோ என்று தெரிய வில்லை.)


விஜய்-னா விஜய்தான். 

         சரி இதுதான் இப்படியென்று  இதைத்தாண்டி வேறொரு சேனலுக்கு போனால் விஜய் படம் ஓடிக்கொண்டிருந்தது.  மின்சாரக்கண்ணா என்று நினைக்கிறேன்.  கதாநாயகி ரம்பாவை நடுஹாலில் கட்டிப்போட்டு வில்லனும் அவன் ஆட்களும் சுற்றி உட்கார்ந்து வசனம் பேசியபடி இருக்கிறார்கள்.. திடீரென்று நம்ம இளைய தளபதி மாடி பால்கனியில் என்ட்ரி ஆகிறார்.  அப்படியே வசனம் பேசிக்கொண்டே படியில் இருந்து இறங்கி வருகிறார்.  என்னடா இது ஆச்சர்யமா இருக்கே ....பால்கனியில் இருந்து அப்படியே ஒரு டைவ் அடிச்சு குதிக்காமல்  சாவகாசமாக படியில் இறங்கி  நடந்து வருகிறாரே... விஜய் படத்துக்கே கேவலமாச்சே-  என்று யோசித்தபடி இருந்தேன்....

         இறங்கி வந்தவர் வில்லனை பார்த்து "என்னடா ஹீரோ டைவ் அடிக்காம படியில இறங்கி வர்றானு பார்க்கிறீங்களா.... டைவ் அடிச்சுட்டாப் போச்சு.."-என்று சொல்லியபடி ஏறிப் போய் அங்கிருந்து ஒரு டைவ் அடித்தார் பாருங்கள்.

          நான் அசந்து போய்விட்டேன்... எப்போதுமே விஜய் ஏமாற்றமாடார் என்று அப்போதுதான் புரிந்துகொண்டேன்.  அப்படியே ஏதேனும் தவறு நேர்ந்துவிட்டால்கூட அதை உடனே திருத்திக்கொள்வார் என்பது இதுதானோ...?

மானாட மயிலாட 
         மானாட மயிலாட பார்த்து ரொம்ப நாளாச்சு.... ஏனோ  இப்போதெல்லாம் அதுக்கு க்ரேஸ் குறைஞ்சு போச்சு... அகஸ்மாத்தாய் பார்த்துகொண்டிருந்தபோது கோகுலும் தமிழரசனும் ஜோக் பண்ணிக் கொண்டிருந்தார்கள்.   கோகுலை எப்போதும் எனக்கு ரொம்பப் பிடிக்கும். எதையாவது வித்தியாசமாக செய்துகொண்டிருப்பார்.  சிரிக்கவும் வைப்பார். இதில் சக நடன மணிகளை இமிட்டேட் செய்து அனைவரையும் சிரிக்கவைத்து கொண்டிருந்தார்.  நல்லாத்தான் இருந்துச்சு.....

        திடீரென்று நிகழ்ச்சிக்கு இடையில் எந்தவொரு அறிவிப்பும் இல்லாமல் ஒரு ரியல் எஸ்டேட் விளம்பரம் போட்டார்கள். அது முடிந்தவுடன் நிகழ்ச்சி தொடர்ந்தது.  அது ஏதோ நிகழ்ச்சி தயாரிப்பாளரின் (ஜே.வீ.மீடியாஸ்) சொந்த விளம்பரம் போல் தெரிகிறது... அதுக்காக இப்படியா.. பிரேக் என்றுகூட சொல்லாமலே  விளம்பரம் போடுவது.... எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கயா......!  இந்த டெக்னிக்  எப்படி கலாநிதி மாறனுக்கு தெரியாம போச்சு...  ?


திருப்பூர் பந்த் 
        திருப்பூர் நகரமே  இப்போது நூல் விலை உயர்வால் விழி பிதுங்கிகொண்டிருக்கிறது.  அரசாங்கத்தின் பார்வையை திருப்ப என்னென்னவோ செய்கிறார்கள். ஒருபக்கம் ஜெயலலிதா கட்சியினர் உண்ணாவிரதம் இருந்து கவனத்தை திருப்பி இருக்கிறார்கள். இன்னொரு பக்கம் வரும் 24-25 ஆம் தேதிகளில் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் மற்றும் கரூர் மாவட்டங்களில் பந்த் பண்ணலாம் என்று டீமா சங்கம் அறிவித்திருக்கிறார்கள்...  ஆகவே மகா ஜனங்களே வரும் வெள்ளி, சனி,  ஞாயிறு மூன்று நாட்களும்  எல்லா டூரிஸ்ட் சென்டர்களும் திருப்பூர்காரர்களால் நிரம்பி வழியப் போகிறது.... உற்சாக பானம் மடை திறந்து ஓடப் போகிறது... வாழ்க பந்த்.


Sunday, September 12, 2010

காக்கா... காக்க...ஒரு குட்டிப் பையனின் குறும் படம்.





        எங்க வீட்ல ஒரு வாண்டு இருக்கான்.  அவன் எதையாவது சுறுசுறுப்பா – பரபரப்பா செய்துட்டே இருப்பான்.  இன்னைக்கு என்கிட்டே வந்து நான் ஒரு குறும்படம் எடுக்கலாம்னு இருக்கேன் –என்று சொன்னான். எல்லாம் கலைஞர் டி.வி. நாளைய இயக்குனர் – நிகழ்ச்சியின் பாதிப்பு.. 
       என்னடா இது இந்த தமிழ் நாட்டுக்கு வந்த சோதனை என்று எண்ணிக்கொண்டே “அதுக்கெல்லாம் கதை வேணுண்டா- என்று சொன்னேன்.
       “இப்ப வர்ற படத்தில எல்லாம் கதைய வெச்சுட்டா எடுக்கிறாங்க?-என்று எதிர் கேள்வி போட்டான்.   
        அது நியாயம்தான் என்று மனதுக்குள் எண்ணிக்கொண்டே “அதுக்காக நாமளும் அப்படி இருக்கலாமா? என்றேன்.
        “அதுக்குத்தான் நான் ஒரு கதையை யோசிச்சு வைச்சிருக்கேன் என்றான்.
         “ஓகே கதையை சொல்லு என்றேன்.
         “சொல்லறேன்... ஆனா ஒரு கண்டிசன்.....நீங்கதான் தயாரிப்பாளரா இருக்கனும், சம்மதமா?-என்று ஒரு பிட்டைப் போட்டான்.
         “அதெல்லாம் அப்புறம் பார்க்கலாம்...முதல கதையைச் சொல்லு... கதை நல்லா  இருந்தா மேற்கொண்டு பார்க்கலாம் என்றேன்.
        “ ஓகே கதை கேக்க நீங்க ரெடியா?-என்று எழுந்து நின்று சோம்பல் முறித்து விட்டு இரண்டு கைகளையும் விரித்த  மாதிரி வைத்துக்கொண்டு  பாரதிராஜா போஸில் நின்றான்.
       “ஸீன்  ஓபன் பண்ணுனா என்று கைகளை அப்படியே மேலே கொண்டுபோனான்.
       “அபூர்வ ராகங்களில் ரஜினி கேட்டை தள்ளிட்டு வர்ற மாதிரி நம்ம ஹீரோ வர்றான்..
       “யாருடா ஹீரோ...?”-என்று கேட்டேன்.  எங்கே ஒரு பெரிய ஹீரோவை போட்டு நம்ம பட்ஜெட்டை எகிற விடுவானோ என்று பயம் எனக்கு.
      “பெரிய ஹீரோவை போட்டு படம் எடுக்கிற அளவுக்கு உங்க கிட்ட பணம் இல்லைன்னு எனக்கு தெரியும்.  அதனால ஹீரோவுக்கு ஒரு பத்தாயிரம் மட்டும் கொடுங்க போதும். அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்.. “-என்றான்.
      “சரிடா...யாரு ஹீரோ  ?
       “நான்தான்...-என்ற போது நான் அதிர்ச்சியின் உச்சத்தில் இருந்தேன்.
       “சரி கதையைச் சொல்லு.. அப்புறம் பார்ப்போம்.-என்றேன்.
கதை சொல்ல ஆரம்பித்தான்..
      “ஒவ்வொருத்தனுக்கும் வாழ்க்கைல ஒரு லட்சியம் இருக்கும்.  ஆனா நம்ம ஹீரோவோட லட்சியம் ரொம்ப சிம்பிளானது.....ஆனா அதை அடைய அவன் எடுத்துக்கிடுற முயற்சிகளும், எதிர்படுகிற தடைகளும்தான் கதை.
      “என்னடா லட்சியம்?
      “ஒரு உண்டி வில்லால கல்லை வைத்து கரண்டு கம்பியில் உட்கார்ந்து இருக்கிற காக்காவை  அடிக்கனும்.- இதுதான் அவன் எடுத்திருக்கிற லட்சியம்.
     “கரண்டு கம்பியில உட்கார்ந்து இருக்கிற காக்காவை  அடிக்கிரது  எல்லாம் ஒரு லட்சியமாடா? என்று கேட்டேன்.
     “இடையில பேசாம கதையை கேக்கணும்-என்று சொல்லி கதையை தொடர்ந்தான்...                         
      “பரீட்சை சமயத்துல அவன் மொட்டை மாடிக்கு போய் படிக்கறது வழக்கம்.  ஆனா அங்க படிக்கறது மட்டும் நடக்காது.  படிக்கறது மட்டும் அல்ல படிக்கறதே நடக்காது....உண்டி வில்லால அங்க வர்ற போற காக்கையை கல்லால அடிச்சு விரட்டீட்டு விளையாடுவான். சில நேரங்களில் உண்டி வில்லால கரண்டு கம்பி மேல உட்கார்ந்து இருக்கிற காக்கையை அடிப்பான்.  ஆனா எந்த சமயத்துலயும ஒரு தடவை கூட அடிச்சது கிடையாது.   இவனெல்லாம் எங்க அடிக்கப்போறான் என்று தில்லாக காக்கா உட்கார்ந்து பார்த்தபடி இருக்கும்.
        கடைசியில முடிவு என்னாச்சுன்னா ஒரு காக்கையை கூட இவன் அடிச்சதே இல்லை.... ஆனா பரீட்சைல கோட்டை உட்டதுதான் மிச்சம்.... இதுக்காக அவங்க அம்மா அவனை விரட்டி விரட்டி காக்கையை அடிச்சதை விட கேவலமா அடிச்சாங்க....            அடி வாங்கிய நம்ம கதா நாயகன் அழுதபடியே மொட்டை மாடிக்கு போனான்.  அப்ப ஒரு காக்கா வந்து கரண்டு கம்பி மேல உட்கார்ந்தது. கா  கா  என்று கத்தியது,  அவனுக்கு “என்னையா அடிக்கப் பார்த்த... என்று  கிண்டலா சிரிச்ச மாதிரி தெரிஞ்சது.  இதனால ஆத்திரம் அடைந்த நம்ம கதா  நாயகன்      “சிரிப்பா சிரிக்கிற...என்று உண்டி வில்லை எடுத்து ஒரு கல்லை வைத்து அத்தனை ஆத்திரத்தையும் அதில் செலுத்தி “இன்னைக்கு    நீ  தந்தூரி ஆகப் போற... என்று சொல்லி கல்லை விட்டான்.              காக்கா  அசந்து   இருந்து இருக்கும் போல...கல்லடி பட்டு திருகி கீழே விழுந்தது...ஆகா நான் ஜெயிச்சுட்டேன்... என்று கத்தி ஆர்பபாட்டம் செய்தான்.   இதுக்கப்புறம்தான் கிளைமேக்சே... 
உடனே எங்கிருந்துதான் அத்தனை காக்கா வந்ததோ தெரியவில்லை.....ஒவ்வொன்றாய் வந்து அவன் தலையில் தபேலா  வாசித்தது.  அதிலிருந்து தப்பிக்க அவனும் தன்னை விஜய்-ஆக நினைத்துக்கொண்டு கையாலும் காலாலும் உதைக்கப் பார்த்தான்.  அதற்குள் அவனுடைய அம்மாவும் அண்ணனும் ஓடி வந்து காப்பாத்தினார்கள்.
இதுதான் கதை... என்றான்.
        “எப்படி இருக்கு?என்று என் முகத்தைப் பார்த்தான்.
        “நல்லாத்தான் இருக்கு.... ஆனா காக்காவா  யார் நடிக்கிறது...உனக்கு வேணா மேக் அப் பண்ணி பார்த்துடலாமா ?
        “அதெல்லாம் அனிமேசன்ல பண்ணிக்கலாம்.-என்ற அவன் தன்னம்பிக்கையைப் பார்த்து அசந்து நின்றேன்.
        “என்ன நீங்க தயாரிக்க ஒத்துக்கிறீங்களா...?
        “ஓகே எப்ப ரிலீஸ்?-என்றேன்....
        “எந்திரன் எப்ப ரிலீசோ  அப்பத்தான் நம்ம படமும் ரிலீஸ்...
        “படத்து பேர் என்ன?
        “காக்கா .... காக்க...

 

Thursday, September 9, 2010

வன வாசம்

தசரதன்
கைகேயிக்கு
கொடுத்த வாக்கு
 ராமனுக்கு-
 வனவாசம்!

தருமன்
சகுனிக்கு
கொடுத்த
வாக்கு,
பாண்டவர்க்கு -
வனவாசம்!

பாவம்
இங்கே
நாங்கள்
கொடுத்த வாக்கு
எங்களுக்கே
வனவாசம்!


பிரியாத ப்ரியங்களுடன்
வெண்புரவி அருணா  

Friday, September 3, 2010

நடுநிசி நாய்கள்


















கடலில்
விழுந்து
காணாமல்
போன
கதிரவனுக்காக
 உலகம்  எனும் காதலி
உடுத்தும்
பனிரெண்டு
மணி நேர
கருப்பு உடை-
இருட்டு !

நடு நிசியில்
நிலவுக்(கள்ளக்)காதலன்
சற்றே
சிரித்தால் போதும்
முகத்திரை
விலக்கி
முறுவல்  காட்டுவாள்.














பிரியாத ப்ரியங்களுடன்
வெண்புரவி அருணா.....


Wednesday, September 1, 2010

திருப்பூரைக் காப்பாற்றுங்கள்



பருத்தியின் வெண்மை ஆள்வோர் நெஞ்சில் இல்லையே...


           திருப்பூரில் ஏற்றுமதி தொழில் கரைந்து காணமல் போகப்போகிறது....  காரணம், அரசாங்கமும் அதன் கொள்கைகளுமே.

         நானும் ஒரு ஏற்றுமதி தொழில் செய்கிறவன் என்பதால் இன்றைய சூழ்நிலையை சரியாக என்னால் கணிக்கமுடிகிறது.

         ஏற்கனவே ஆட்கள் பற்றாக்குறையால் தத்தித் தவழ்ந்து கொண்டிருந்த தொழில் டையிங் பிரச்சினையால் படுத்துகொண்டிருக்கிறது. கொஞ்ச நாட்களுக்கு முன்னால் ஆரம்பித்த நூல்விலையேற்றப் பிரச்சினையால் முடங்கிப்போன தொழில் அரசாங்கத்தின் கடைக்கண் பார்வையால் நூல் விலை சற்று இறங்க தொழில் கொஞ்சம் மூச்சு விடத் தொடங்கியது.

        ஆனால் அரசாங்கம் மீண்டும் முருங்கை மரம் ஏறி உட்கார்ந்துள்ளது.  தனது ஏற்றுமதி கொள்கைகளை மாற்றிய பின்னர் தைத்த உடைகளாக ஏற்றுமதி செய்வதைவிட நூலாகவே ஏற்றுமதி செய்ய முன்னுரிமை அளிக்கிறது.

அரசாங்கத்தின் இந்த முடிவு திருப்பூரில் உள்ள ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர்களுக்கு பேரிடியாக அமைந்துள்ளது.

        நூல் மில்கள் தற்போதைய விலையைவிட பத்து ரூபாயிலிருந்து பதினைந்து  ரூபாய் வரை விலையை ஏற்றும்.  இந்த விலையை அடிப்படையாக கொண்டு பையர்களுக்கு கொட்டேஷன் கொடுக்கும் பட்சத்தில் ஏற்றுமதி ஆர்டர்கள் சீனா, பங்களாதேஷ் போன்ற நாடுகளுக்கு பொய் விட வாய்ப்பு இருக்கிறது. இந்த விலை கொடுத்தாலும் கூட நூல் கிடைக்காத நிலை வரப்போகிறது. அப்படிப் போனால் தூங்கா நகரம் தூங்கி வழிய வேண்டியதுதான்.

         இப்படி ஒரு ஏற்றுமதி கொள்கையால் அரசாங்கம் மறைமுகமாக சீனா, பங்களாதேஷ் போன்ற போட்டி நாடுகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது.  தற்போதைய நிலவரப்படி சீனாவில் பருத்தி விளைச்சல் குறைவாகவே உள்ளது.  அதனால் தன்னுடைய பருத்தி தேவைகளுக்கு இந்தியாவையே நம்பியுள்ளது. ஆகையால் என்ன விலை கொடுத்தாலும் நம் வளங்களை வாங்கியே தீரும்.

          ஏற்றுமதியை விடுங்கள்... உள்நாட்டு பனியன், ஜட்டி உற்பத்திக்கும் இதே கதைதான்.  நூல் விற்கும் விலைக்கு ஏற்றபடி விலையை ஏற்றவே செய்வார்கள்.  அதனால் விற்பனை குறையும்.  அதை நம்பி நிற்கும் ஏராளமான தொழிலாளர்களின் நிலைமை நடுத்தெருவில்தான்.

          ஆங்கிலேயர் காலத்தில்தான் இங்கிருந்து பருத்தியாக லண்டன போய் ஆடையாக இந்தியாவுக்கு கொண்டுவந்து நமக்கே விற்பார்கள். அந்த காலம் மறுபடியும் வரப்போகிறது.  இந்த நிலை மாறும் வரை நாம் அனைவரும் அம்மணமாகவே நிற்க வேண்டிவரும். நெய்பவனுக்கு உடுத்த துணியில்லை என்பது எந்தக்காலத்திலும் மாறாது போலிருக்கிறது.

          திருப்பூரைப் பொருத்தவரை இங்கு மண்ணின் மைந்தர்கள் குறைவுதான். தமிழ்நாட்டின் எல்லா பாகங்களில் இருந்தும் மக்கள் வந்து குவிந்து கிடக்கிறார்கள். ஏன் இப்போது பீகாரில் இருந்தும், ஒரிஸ்ஸாவில் இருந்தும்கூட ஏராளமான மக்கள் வந்து வேலை செய்கிறார்கள். 

 அவர்களுடைய பொருளாதாரம் இந்த தொழில் சார்ந்தே உள்ளது.  (இன்னும்கூட ஒரு தமிழ்நாடும்  ஒரு பீகாரும் திருப்பூருக்கு தேவைப்படும்)

அவர்கள் அத்தனை பேருடைய நிலையும் கேள்விக்குறிதான்.


        உடனடியாக திருப்பூரில் உள்ள தொழில் சார்ந்த சங்கங்களும், மக்களும் விழித்துக்கொண்டு போராட்டத்தில் இறங்கினால்தான் அரசியல்வாதிகள் இறங்கி வருவார்கள்.  டீமா (Tiruppur Export and Manufactures Association) சங்கம் முழுமூச்சாக இறங்கி விவாதித்துக கொண்டிருக்கிறார்கள்.  அவர்கள் ஏதாவது உருப்படியாகச் செய்வார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

        அரசியல்வாதிகளே.... எதையாவது செய்து இந்த தொழிலை  அழிந்துபோகாமல் காப்பாற்றுவீர்களா?.....
உருகி வழியுமுன்...


பிரியாத ப்ரியங்களுடன்
வெண் புரவி அருணா...
NEST FASHIONS