PLEASE CLICK HERE TO VIEW IN YOUR LANGUAGE

Friday, September 30, 2011

எங்களுக்கு நண்பரான எஸ்.ரா.

"எழுத்தாளர் என்பவர் எப்போதும் நிலத்திலிருந்து ஒரு அடி மேல்தான் நடப்பார். தலையில் ஒரு கிரீடம் சூடியிருக்கும்.  சூடான கேள்விகளுக்கு கோபம் கொப்பளிக்க பதில் சொல்லுவார். அவருக்கு தெரியாதது எதுவும் கிடையாது."-என்பதான ஒரு பிம்பம்தான் எல்லா எழுத்தாளர்களைப் பற்றியும் எனக்கு இருந்தது.  சில வேளைகளில் அது உண்மையாகவும் இருந்தது.

24-ம் தேதி காலை எழுத்தாளர் எஸ்.ரா. திருப்பூர் வந்தார்.  நாங்கள்  அன்று மாலையில் சந்தித்தோம்.  ஊத்துக்குளி அருகில் உள்ள சுக்ரீஸ்வரர் எனும் பழம்பெருமை வாய்ந்த கோவிலில்தான் எங்களது சந்திப்பு நடந்தது.  கோவிலைப் பார்த்தவுடன் அதிலிருந்தே தனது பேச்சை தொடங்கினார். அந்த கோவிலின் காலம் சோழர் காலமாகத்தான் இருக்கவேண்டும் என்று ஒரு தேர்ந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர் போல் அவர் எடுத்துச் சொன்னதில்  நாங்கள் அசந்து விட்டோம்.

எங்களுக்கென்று தனி பிரசங்கம்

அவருடன் பேசியதில் சில துளிகள்...

# சிற்பங்களையும் அதன் நுணுக்கங்களையும் கொண்டு அது யார் காலத்தில் வடிக்கப் பட்டது,  அதன்  வயதையும்  அறியலாம்.

# ஒரு கோவில் இருந்தால் அந்த கோவிலை சுற்றி பாளையம், மங்களம், பள்ளம் என்ற பெயரில் ஊர்கள் இருக்கும்.  கோவில் இருக்கும் இடம் பெரிய பாளையம், அருகில் விஜய மங்களம், பள்ளகவுண்டன் பாளையம்  எனும் ஊர்கள் இருக்கிறது.  பாளையம் என்பது பாளையக்காரர்கள் இருப்பது. இவர்களே சோழர்களின் பிரதிநிதிகள்.  மங்களம் எனும் ஊரில்தான் கோவிலை கட்டுபவர்கள்  குடி இருப்பார்கள். கோவில் வேலைக்கு வருபவர்கள் குடும்பத்தோடு வரக்கூடாது. அப்போதுதான் கண்ணும் கருத்துமாக வேலை செய்வார்களாம்.  என்னே ஒரு மேனேஜ்மென்ட் பாலிசி.  பள்ளம் எனும் ஊர்களில்தான் கோவிலை கட்டத் தேவையான மண்ணை வெட்டி எடுப்பார்களாம். மன்னர் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் ஒரு வாரம் கோவிலில் நடத்தப்படவேண்டும் என்பது விதியாம்.

# ராமாயணத்தில் பல பர்வங்கள்(காண்டங்கள்) உண்டு.  சாந்தி பர்வம் மட்டும் இரண்டு இருக்கும். ஒன்று முழுக்க முழுக்க சமஸ்கிருதத்தில் இருக்கும்.  அது பிற்காலத்தில் பிராமணர்களால் எழுதி சேர்க்கப்பட்டது.

#எந்த எழுத்தாளர் அதிகமான புது வார்த்தைகளை உபயோகித்து எழுதுகிறாரோ அவரே  சிறந்த எழுத்தாளராக புகழ் பெறுவார்.  அப்படி அதிகமான புது வார்த்தைகளை உபயோகித்து எழுதியவர்களில் ஆங்கிலத்தில் சேக்ஸ்பியரும்  தமிழில் கம்பரும் ஆவார். அதனால்தான் அவர்கள் காலம் தாண்டி பேசப்படுகிறார்கள்.

இப்படி எந்த கேள்வியை கேட்டாலும் அதற்குண்டான பதிலை விலாவாரியாகவும் சுவராஸ்யமாகவும் சொல்லி எங்களை கட்டிப் போட்டிருந்தார்.  அவருடைய பேச்சில் மயங்கி கொஞ்சம் விலகியே இருந்த நாங்கள் எங்களை அறியாமலேயே கொஞ்சம் கொஞ்சமாய் மனதளவில் நெருங்கி இருந்தோம்.

இரவு உணவு அருந்திய பிறகு  எங்களின் வேண்டுகோளின்படி அவருடைய அந்த நாள் இரவை எங்களுக்கு கொடுத்தது எங்கள் பாக்கியம் என்றே சொல்வேன்.

அதன்பிறகும் நடு இரவுவரை சளைக்காமல்  எங்களோடு உரையாடியது எங்கள் வாழ்நாளில் மறக்கமுடியாதது.
நள்ளிரவு உரைவீச்சு


அதிலிருந்து சில துளிகள்..

# இயக்குனர் ஜீவாவும் எஸ்.ராவும்  மிகவும் நெருக்கமானவர்கள்.  ஏறக்குறைய அவருடைய  எல்லாப் படங்களிலும் எஸ்.ரா. பணியாற்றி இருக்கிறார்.  ஜீவாவின் படங்களில் பங்கேற்கும்  டெக்னீசியன்களை எதாவொரு காட்சியில் தலை காட்ட வைத்துவிடுவார்.  அனால் ஜீவா மட்டும் எந்த ஒரு காட்சியிலும் நடிக்க மறுத்துவிடுவாராம்.  யார் எவ்வளவு சொன்னாலும் பிடிவாதமாக நடிக்கவே மாட்டாராம்.  தாம் தூம் படத்தில் ஒரு காட்சியில்  விருப்பப்பட்டு நடித்தாராம்.  பிறகு அந்தப் படத்தில் பாதியிலேயே அவர் இறந்துவிட்டது நாம் அறிவோம்.  படத்தை முடித்து, எடிட்டிங் டேபிளில் உட்கார்ந்து படத்தை கோர்த்துக் கொண்டிருக்கும்போது ஓர் காட்சி வந்தது.  ஜெயம் ரவி ஒரு தெருவை கடக்கும்போது பின்புலத்தில் ஜீவா வருகிறார். அவர் தெருவை கடந்து சென்றபிறகு  நின்று திரும்பி ''டாடா பை பை "  என்று சொல்லிவிட்டு போய்விடுகிறார்.   அந்த காட்சியை கண்டதும் அப்படியே அடித்து போட்டது மாதிரி உட்கார்ந்துவிட்டாராம்.  நடிக்கவே மாட்டேன் என்று பிடிவாதமாக சொன்னவர் கடைசியில் டாட்டா சொல்வது மாதிரி நடித்தது எதனால் என்று யாருக்குத் தெரியும்.

#  நடிகர் கவுண்டமணியுடனான உரையாடலை சிரிக்க சிரிக்க சொன்னது அருமை.

# இயக்குனர் பாலாவுடனான நட்பை சொன்னதும் அவன்-இவனைப் பற்றி நாங்கள் கேட்ட அத்தனை  எடக்கு கேள்விகளுக்கும் பொறுமையாய் பதில் சொன்ன விதம் எங்களுக்கு மிகவும் பிடித்திருந்தது.

#பிடித்த சினிமா, பிடித்த புத்தகம், பிடித்த உணவு, சுந்தர ராமசாமி, என்று அவரைப் பற்றி ஏகமாய் தெரிந்துகொண்டோம்.

அதன் பிறகும் பிரிய மனம் இல்லாமல் அடுத்த நாள் நிகழ்ச்சி இருந்ததால் அவர் கிளம்பி போகவேண்டியதாப் போயிற்று.

அந்த இரவினில் அவருடைய நினைப்பினில் இமைகள் மூட மறுத்து  அடம் பிடித்தது.

அடுத்த நாள் சேர்தளம் நடத்திய அந்த கலந்துரையாடல் நிகழ்ச்சி அவர் வருகையின் மகுடமாக அமைந்தது.  பயணங்கள் பற்றிய அவரது  நீண்ட உரை அந்த ஹாலில் இருந்த அனைவரையும் கட்டிப் போட்டது.  அதன் பிறகு அவரது வாசகர்கள் ஒவ்வொருவரும் கேட்ட அறிவுபூர்வமான கேள்விகளும் அவரது நேர்மையான பதில்களும் அவர் மேல் இருந்த மதிப்பை மேலும் உயர்த்தியது.

 அவருடைய உரையாடலை இந்த நிரலியில் கேட்கலாம்.

நிகழ்ச்சி  முடிந்தபின்னும்  கலையாத கூட்டம் அவர் மேல் வாசகர்கள் வைத்திருந்த அன்பைக் காட்டியது.

# நீங்கள் ஏன் கவிதை எழுதுவதில்லை? என்று ஒருவர் கேட்டார்.  கவிதை படிக்க மட்டுமே பிடிக்கும்.  எனக்கு கவிதை எழுத வராது என்று சொன்ன நேர்மை எல்லோருக்கும் பிடித்திருந்தது.

#எப்படி எல்லாக் கேள்விகளுக்கும் உங்களால் பதிலளிக்க  முடிகிறது? என்று ஒருவர் கேட்டார்.
எப்போதும் எல்லாக் கேள்விகுக்கும் பதில் அளிக்க மாட்டேன். எனக்கு பதில் தெரியாது எனில் தெரியாது என்று சொல்ல நான் தயங்கியதில்லை என்று சொன்னார்.

#வாசகருக்கும் உங்களுக்குமான தொடர்பு எப்படி இருக்கிறது என்று அடுத்த கேள்வி விழுந்தது.  அதற்கு அவரது அனுபவத்திலிருந்து சொன்ன பதில்..
"நான் ஓர் பிரபல எழுத்தாளரை எனது நண்பனோடு சந்திக்க அவரது வீட்டுக்கு செண்டிருந்தேன்.  சிறிது நேரம் பேசியவர் சினிமாவுக்கு மனைவியோடு போகவேண்டி இருப்பதால் மாலை எங்களை வரச்சொல்லிவிட்டு படம் பார்க்க பொய் விட்டார்.  நாங்கள் வீட்டுக்கு வெளியே வந்து நின்றுகொண்டு என்ன செய்வது என்று யோசித்தோம். புதிய ஊர். எங்கு போவது என்று தெரியவில்லை.  சரி என்று நாங்களும் ஒரு சினிமாவுக்கு போவதென்று தீர்மானித்து ஒரு தியேட்டரில் போய் உட்கார்ந்தோம்.  பார்த்தால் முன்சீட்டில்  அந்த எழுத்தாளர் மனைவியோடு அமர்ந்திருந்தார்.  எங்களை பார்த்ததும் அவருக்கு பலத்த அதிர்ச்சி. எங்களுக்கும் அதுவே.  அவரோ 'என்ன எங்களை பின்தொடர்ந்து வருகிறீர்களா?' என்று கேட்டார்.  நாங்கள் அப்படியெல்லாம் இல்லை என பகர்ந்தோம்.  ஆனால் அவர் அதை நம்பவில்லை. எங்களைப் பார்த்து 'ஒழுங்கு மரியாதையாக இந்த இடத்தை காலி செய்து விடுங்கள்.. இல்லையெனில் நாங்கள் எழுந்து போய் விடுவோம்'-என்றார்.  நாங்கள் ஒரு நிமிடம் யோசித்து விட்டு,'நீங்கள் எழுந்து போவதில் எங்களுக்கு ஆட்சேபனையில்லை' என்று உறுதியாக சொன்னோம்.  உடனே அவர் தன் மனைவியோடு  எழுந்து சென்றுவிட்டார்.  நாங்கள் படம் முடித்தபிறகு மீண்டும் அவர் வீட்டுக்கு சென்று காலிங் பெல் அடித்தோம்.  வந்து கதவை திறந்தவர் என்ன என்று அதட்டலாகக் கேட்டார்.  நாங்கள், 'நீங்கள் மாலை வரச் சொன்னீர்களே?'-என்றோம்.  கதவை அடித்து சாத்திவிட்டு உள்ளே சென்றவர் பிறகு கதவை திறக்கவேயில்லை.

அதேபோல் இன்னொரு எழுத்தாளர் வீட்டிற்கு சென்றிருந்தபோது தண்ணீர் கேட்டோம்.  தண்ணீர் கொண்டு வர உள்ளே போனவர் ஒரு மணி நேரமாக வெளியே வரவே இல்லை. மீண்டும் காலிங் பெல் அடித்தோம்.  அவரது மனைவி வந்தார்.  எழுத்தாளர் தூங்கி கொண்டிருக்கிறார், அப்புறமாய் வந்து பார்க்கச் சொன்னார்.

அதன் பிறகு எஸ்.ரா. சொல்கிறார்

"அப்போது நான் ஒரு சபதம் எடுத்துக் கொண்டேன்.  நான் ஒரு  எழுத்தாளர் ஆனால் என்னுடைய வாசகர்களை அவர்களுடைய இடத்திற்கே சென்று சந்தித்து அவர்களோடு அவர்கள் ஆசை தீரும் வரை பெசிக்கொண்டிருக்கவேண்டும். "

இப்படி அவர் சொன்னபோதுதான் அவரைப் பற்றி நான் வரைந்து வைத்திருந்த மன ஓவியம் சாயம் போய் அழிந்து காணாமல் போனது  

என்னைப்  பொருத்தவரை  முதல் பத்தியில் சொன்ன மாதிரியான பாவத்தோடுதான் முதலில் அவரை அணுகினோம்.  கொஞ்சம் கொஞ்சமாக அவரை இதயபூர்வமாக நெருங்கினோம்.  இறுதியில் அவரை புகைவண்டி நிலையத்தில் பிரியும்போது,  எங்கள் உள்ளங்கள் எல்லாவற்றையும் கொள்ளை கொண்டுபோன நெடுநாள் நண்பனாகவே  அவர் எங்களுக்கு தெரிந்தார்.  மீண்டும் எப்போது அந்த நண்பனை சந்திப்போம் என்று ஏங்க வைத்ததை அவரது சாதனையாகவே கருதலாம்.

  

Saturday, September 24, 2011

எழுத்தாளர் எஸ்.ரா-வுடன் ஓர் மாலை நேரம்.

நமக்கு ஆதர்சமாய் நிறைய எழுத்தாளர்கள் இருப்பார்கள்.  நம் மனதினில் அவர்களை ஆராதித்துக் கொண்டிருப்போம்.  அவர்களை நாம் மானசீகமாக குருவாகக்கூட கொண்டிருக்கக் கூடும்.    ஆனால் நேரில் பார்த்திருக்க வாய்ப்பு கிடைத்திருக்காது.  நேரில் பார்க்கும் பொது அறிவுபூர்வமான ஆயிரம் கேள்விகள் கேட்பதற்கு இருக்கக் கூடும்.  அவருடன் ஆசையாக பரிமாறிக்கொள்ள எண்ணங்கள் ஆயிரம் இருக்கலாம்.  இவையெல்லாம் சாத்தியப் படுத்த ஒரு தருணம்  நமக்கு அமைத்துத் தருகிறது சேர்தளம் எனும் திருப்பூர் வலைப்பதிவர்கள் குழும அமைப்பு.


 
எழுத்தாளர் எஸ்.ரா-வுடன் ஒரு மாலை நேரத்தை இனிமையாய் கழிக்க வாருங்கள்...

இன்னும் விரிவான அழைப்பிதழ் நண்பர் முரளிகுமார் பத்மநாபன் அவர்களிடமிருந்து..
 

Thursday, September 22, 2011

ஒரு வீடும் ஒரு உயிரும்!

னக்கு கல்யாணம் ஆகும்போது வாடகைக்கு ஒரு வீட்டில் குடி இருந்தேன்.  அந்த வீட்டுக்காரர் ஒரு முதியவர். அவருடைய மகன் வெளிநாட்டில் வேலை செய்கிறார். முதியவருக்கு மனைவி இல்லை.  தனியாகவே சமையல் செய்து கொள்வார்.  அவருடைய மகள்கள் இருந்தபோதும் அங்கு அதிகமாக செல்லமாட்டார்.  அவருடைய மனைவி நினைப்பிலும் மகன் வந்து தன்னை காப்பாற்றுவான் என்ற நினைப்பிலும் வாழ்ந்து வந்தார்.

அங்கு குடி இருந்த வரையில் அவர் எங்களோடு மிகவும் பாசமாகவே இருப்பார்.  எனது மனைவியும் அவரை நன்றாக கவனித்துக் கொள்வார்.  அவர் என்னை சொந்த மகன் போலவே நினைப்பதாக சொல்வார். நானும் அப்படியே அவரை எனது தந்தையாகவே நினைத்தேன்.

அப்போது என் கையில் கொஞ்சம் பணம் இருந்ததால் முதன் முதலில் நான் ஒரு வீடு வாங்கலாம் என்று முடிவுக்கு வந்தேன்.
இந்த முடிவு அவருக்கு பிடித்ததாகத் தெரியவில்லை.  அப்போது எனது மனைவி பிரசவத்துக்காக பிறந்த வீடு சென்று இருந்தாள்.
இந்த சமயத்தில் நான் இருந்த வீட்டுக்கு பக்கத்திலேயே ஒரு வீட்டை விலை பேசி முடிவு செய்து அட்வான்ஸ் கொடுத்தோம்.

இது தெரிந்ததும் வீட்டுக்காரர் உடனே வீட்டை எப்போது காலி செய்வீர்கள் என்று கேட்க்க ஆரம்பித்துவிட்டார்..
நான் வாங்கியிருந்த வீடு ஒரு 10 x 10 அளவிலான ஒரு அறையும் அதைவிட சின்னதான சமையலறையும் மட்டுமே கொண்டது.   அதில் நான், எனது அம்மா, மனைவி மற்றும் பிறக்கப் போகும் குழந்தைக்கும் போதாதாகையால் இன்னொரு அறையும்  இருக்கிற காலியிடத்தில் கட்டிய பிறகு போய்விடலாம் என்றிருந்தோம்.

ஆனால் அவ்வளவு நாள் (சுமார் இரண்டு வருடங்கள்) அன்யோன்யமாய் பழகி இருந்தும் அந்த முதியவர் வீட்டை உடனே காலி பண்ணச் சொல்லிவிட்டார்.  இந்த சமயத்தில் என் மனைவி ஒரு ஆண் மகவை ஈன்றெடுத்தார்.  அவசர அவசரமாக வீடு கிரையம் முடிந்துவிட்டது.
இந்த சமயத்தில் வீடு காலி பண்ணியே ஆகவேண்டும் என்று ஒற்றை காலில் நிற்க்கிறார்.
குழந்தையை எடுத்து வரவேண்டும்,  இன்னொரு அறை கட்டியாக வேண்டும்.  எதற்கும் அவகாசம் கொடுக்கவில்லை அவர்.  ஒரே நாளில் இரவோடு இரவாக புது வீட்டுக்கு எந்த விதமான பூஜை எதுவும் போடாமல் நானும் எனது அம்மாவும் மட்டும் அந்த புது வீட்டுக்கு போயாயிற்று.

அவருடைய போக்கு எங்களுக்கு புரியாததாகவும்  மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியதாகவும்  இருந்தது.  அவர் ஏன் அப்படி நடந்து கொண்டார் என்று இன்றளவும் புரியவில்லை.

அந்த வீட்டுக்கு வந்ததும் ஒரு மேஸ்திரியை பிடித்து பேசி வீட்டு வேலையை ஆரம்பித்தோம். அது முடிய மூன்று நான்கு மாதங்கள் பிடித்ததால் எனது மனைவி இருப்பு தாங்காமல் பிடிவாதம் பிடித்து குழந்தையை எடுத்துக்கொண்டு அரைகுறை வீட்டுக்கு வந்து விட்டார்.

 பிறகென்ன கொத்தனாரிடம் வெகுவாக சண்டை பிடித்து அந்த வீட்டு வேலையை முடிக்க வேண்டியாகி விட்டது.  பணப் பற்றாக் குறை வேறு.  சொந்த பெரியப்பவிடம் ரூபாய் இருபதாயிரம் கடன் கேட்டதற்கு ப்ரோ நோட்டில் கையெழுத்து வாங்கிய பிறகே பணம் கொடுத்தார்.  மாதா மாதம் வட்டி தவறாமல் கட்டவேண்டும்.

இந்த வீடு எனக்கு பலரின் முகத் திரையை கிழித்து காட்டியது.  எப்படியோ ஒரு வழியாக வேலை முடிந்து அப்பாடா என்று  கிரகப் பிரவேசம் நடந்தது.

அதன் பிறகு எனது மகன் தவழ்ந்து விளையாடிய வீடு அதுவானது.  அந்த வீட்டில்தான் எனது இரண்டாவது மகனும் பிறந்தான்.  இந்த வீட்டில் இருந்துதான் எனது முதல் பையனை பள்ளிக்கு போக ஆரம்பித்தான்.  இங்கிருந்துதான் அருகிலேயே ஒரு காலி இடம் வாங்கினேன்.  தொழிலும் மிகச் சிறப்பாக இருந்ததும் இங்கே இருந்த போதுதான்.

 எனக்கென்று எந்தவிதமான சென்டிமென்ட் இருந்ததில்லை.  அதில் எனக்கு நம்பிக்கையுமில்லை.  ஆனால் இந்த வீடு விசயத்தில் அது அத்தனையும் உடைந்து போனது.



கொஞ்ச நாளில் அந்த பழைய வாடகை வீட்டு முதியவர் அவருடைய வீட்டுக்குள் இரவு படுத்து இருந்தவர் காலையில் எழும்போது இறந்து இருந்தார்.  எப்படி இறந்தார் என்று யாருக்குமே தெரியவில்லை. மிகவும் ஆச்சர்யமாக இருந்தது.

வாங்கிய காலி இடத்தினில் எனக்கென்று ரசித்து ரசித்து ஒரு வீடு கட்டினேன்.  அதில் குடியேறினோம்.  இருந்த வீடு பழைய வீடு ஆனது.  அதை வாடகைக்கு விட்டோம்.  

இப்போது ஒரு நெருக்கடியிலிருந்து மீள்வதற்காக அந்த வீட்டை விற்க வேண்டிய சூழல் வந்திருக்கிறது.  எனது மனைவியிடம் சொன்னேன்.

"அந்த வீட்டை விற்று விடலாம்"

இரண்டு நாள் என்னிடம் பேசவேயில்லை.

பிறகு நானே கேட்டேன்.

"என்ன ஒன்னும் சொல்லவே மாட்டேன்கிற?"

என்னை ஒரு முறை ஏற இறங்கப் பார்த்து

"அது வெறும் வீடு இல்லங்க....அதுக்கும் உயிர் இருக்கு!  எங்க உசிரும் அதுலதான் இருக்கு!"-என்று சொன்னாள்.

எனக்கு கொஞ்சம் நெஞ்சு வலித்தது மாதிரி இருந்தது.


  

Monday, September 19, 2011

ஏழாம் அறிவு பாடல்கள் -ஒரு முன்னோட்டம்!

ழாம் அறிவு படத்தின் பாடல்களை எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் இந்த  வேளையில்  நான் YOUTUBE-ல் ஒரு விடியோவை காண   நேர்ந்தது.
நீங்களும் பாருங்கள்.  லிங்க் இங்கே


சூர்யா ஒரு சர்க்கஸ் செய்பவராக வருகிறாராம்.. அவருடைய அறிமுகப் பாடலாக ஓ ரிங்கா ரிங்கா என்று ஒரு பாடல். அது ஆயிரம் நடனக் கலைஞ்ர்களை வைத்து ரங்கநாதன் தெருவில் எடுத்திருக்கிறார்களாம். எப்படி எடுத்திருக்கிறார்கள் எப்படி வந்திருக்கிறது என்று பார்க்க ஆவலை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.

'முன்னந்தி' பாடல் பாங்காக்கில் அண்டர்வாட்டர்-ல் எடுத்திருக்கிறார்கள்.... ஸ்ருதியை இவ்வளவு அழகா என்று வியக்கும்படியாக காட்டி இருக்கிறார்கள்.

கபிலன் எழுதி எஸ்.பி.பி பாடி இருக்கும் 'யம்மா யம்மா காதல் சொல்லம்மா ' பாட்டு நல்ல மனங்கவர் மெலடி... ரயில் ட்ராக் செட் போட்டு எடுத்திருக்கிறார்களாம்.

'எல்லேலம்மா' என்றொரு ராக் பாடல் வருகிறது.

கார்க்கி எழுதிய ஒரு சைனீஸ் பாடல் வேறு.   ."ஓஹாயயாமா  ஓஷியாமா'-போல ஒரு மேலடியில்
ஹாரிஸ் ஜெயராஜ் இறங்கி விளையாடி இருக்கிறார் போலும்.

இவையெல்லாம் பாடல்களையும் படத்தையும் பற்றிய எதிர்பார்ப்பை இன்னும் எகிறச் செய்கிறது.

வரும் 22-ல் பாடல் வெளியீடு... அதுவரை காத்திருப்போம்.

Friday, September 9, 2011

படிப்பைத் தந்த காமராஜரின் மதிய உணவுத் திட்டம்(2)

இதுக்கு முன்னாடி எழுதுன 'படிப்பைத் தந்த காமராஜரின் மதிய உணவுத் திட்டம்(1)' இதை முதல்ல படிச்சுடுங்க..

நான் கிராமத்துல படிக்கும்போது எங்கள் பள்ளியில் கைத்தொழில் என்று ஒரு வகுப்பு உண்டு. அதன் ஆசிரியர் தேவேந்திர வாத்தியார்.  இவர் வெளியூர்காரர்.  இங்கே வந்து தங்கி வார இறுதி நாட்களில் ஊருக்கு செல்வார்.  அவருக்கு பல வகையில் நான் உதவியா இருந்திருக்கிறேன்.  ஆகையால் என் மீது அவருக்கு தனி பிரியம் உண்டு.

கைத்தொழில் வகுப்புகளில் தோட்டவேலைகளை கற்றுக் கொடுப்பார்.  அவரை, முருங்கை, தக்காளி, கத்தரி, மிளகாய் போன்ற செடிகளை வளர்த்து வந்தோம்.  அதில் விளைகிறதை எடுத்து விற்பனை செய்யும் உரிமையை ஏலம் விடுவார்.  அதை நான் இரண்டு ரூபாய்க்கு ஏலம் எடுத்தேன்.

அந்த இரண்டு ரூபாயை நான் திரும்பி எடுத்தேனா என்றால்... இல்லை.  அங்கு கிராமத்தில் எல்லோர் வீட்டிலும் இந்த மாதிரி சின்ன சின்ன வீட்டுதோட்டங்கள் இருக்கும்.  ஆகையால் நான் எடுத்துப்போகும் காய்கறிகளை வாங்குவார் யாரும் இல்லை.  இப்படி நஷ்டம் ஆகியது தனிக்கதை.

இதெல்லாம் விடுங்க மெயின் கதைக்கு வருகிறேன்.

நான் திருப்பூர் வந்தேனா... குடும்பமும் வந்தது... என்னை பள்ளிக்கு அனுப்பும் எண்ணம் வீட்டில் யாருக்கும் இல்லை.  பள்ளியில் அப்ளிகேசன்  வாங்க யாரும் போவதாகத் தெரியவில்லை. நானும் அழுது பார்த்துவிட்டேன்.. யாரும் மசிவதாகத் தெரியவில்லை.

அப்போதுதான் ஆபத்பாந்தவனாக தேவேந்திர வாத்தியார் வந்தார்.  என்னைப் பார்ப்பதற்காக அவ்வளவு தூரத்திலிருந்து வந்திருக்கிறார்.  நான் விவரத்தை சொல்லவும் என் அம்மாவையும் அப்பாவையும் லெப்ட் அன் ரைட் வாங்கினார்.  கையிலிருந்து இருநூறு ரூபாயை எடுத்துகொடுத்து புத்தகங்கள் வாங்கிக் கொள்ளுமாறு கூறினார்.  கண்ணில் நீர் வழிய நான் வாங்கிக்கொண்டது இன்னும் என் நினைவினில் அழகான புகை ஓவியமாய் இருக்கிறது.

அதற்கப்புறம் வேலை ஜரூராக  நடந்தது.   நான் பள்ளியில் சேர்ந்தேன்.  அதோடு டைப் ரைட்டிங் கிளாசும் சேர்ந்தேன்.  பத்தாவது போகும்போது டைப் ரைட்டிங் நன்றாக கற்றுக்கொண்டேன்.  அதே டைப் ரைட்டிங் ஆபீசில் என்னை பார்டைமாக ட்யுடராக போட்டார்கள்.  கொஞ்சம் வருமானம் வந்தது.  ஆகையால் வீட்டில் காசு கேற்கும் வழக்கத்தை விட்டேன்.  அதுவே சரியாக இருந்தது.  அதனால் எந்த இடைஞ்சலும்  இல்லாமல் என் படிப்பு போனது.

பத்தாவது பாஸ்.  மீண்டும் லீவில் வேலைக்குப் போயாயிற்று.  இந்த முறை கட்டிட வேலை.  ஏனெனில் என் வீட்டை சுற்றி இருப்போர் கட்டிட வேலை செய்வோர். அதில் கூலியும் அதிகம்.  ஆகையால் அந்த வேலைக்கே போனேன்.  ஆனால் இந்த முறையும் +2 அனுப்பும் எண்ணம் எங்கள் வீட்டில் இல்லை.  வேலைக்கே போகச் சொன்னார்கள்.

அப்போது என்னை தேடி வந்தவர் முதலில் எனக்கு உதவிய அதே தங்கபாண்டிய வாத்தியார்.  வந்து என் பெற்றோரிடம் பேசி வழிக்கு கொண்டு வந்தார்கள்.  +2 முதல் குரூப் இங்கிலீஷ் மீடியம் சேர்ந்தாயிற்று.  நண்பர்கள் அனைவரும் அதில்தான் சேர்ந்திருந்தார்கள்.  ஆகையால் கண்ணை மூடிக்கொண்டு சேர்ந்தாயிற்று.  ஆனால் மாதம் இருபது ரூபாய் கட்டவேண்டும்.  அரசாங்க பள்ளிதான், ஆனாலும் இங்க்லீஷ் மீடியம் என்பதால் இருபது ரூபாய் கட்ட வேண்டியிருந்தது.   எப்படியோ தக்கி முக்கி வீட்டில் கொஞ்சமும், கொஞ்சம் பார்டைம் வேலையிலும் சம்பாரித்து கஷ்டப் பட்டு படித்தாயிற்று.

+2 பாஸ்.  எனக்கு காலேஜ் போகும் எண்ணமெல்லாம் கிடையாது.  போதும் இது வரைக்கும் படித்ததே பெரிய விசயமாக இருந்தது.  இனிமேல் வீட்டையும் கவனிப்போம் என்று ஒரு பனியன் கம்பெனியில் ஆபீஸ் பாயாக சேர்ந்தாயிற்று.

ஆனால் இந்தமுறை என்னாச்சோ தெரியவில்லை  என் அப்பா எப்படியாவது என்னை படிக்க வைத்துவிடுவது என்று ரொம்ப ஆசைப் பட்டார்.  அதற்கான முயற்சிகளிலும் இறங்கினார்.  எங்களது உறவினர் மூலமாக யுவராஜ் கார்மென்ட்ஸ் எனும் நிறுவனத்தை நடத்தி வரும் திரு மனோகர் , திரு சம்பத் அவர்களிடம் உதவி கேட்டார்.  அவர்களும் சம்மதிக்க எனது கல்லூரி  பயணம் தொடர்ந்தது.
THIRU.SAMPATH  YUVARAJ MERCH X


சும்மா சொல்லக் கூடாது ஒவ்வொரு செமஸ்டர் தொடங்கும் போதும் அவர்களுடைய  ஆபீசுக்குச் சென்று பணம் கேட்பேன்.  எந்தவித கேள்விகளும் கேட்காமல் உடனே பணம் தரச்சொல்லி கணக்குப்பிள்ளையிடம் சொல்வார். மூன்று வருடங்களும் மனம்  கோணாமல் எந்த வித கேள்விகளும் கேட்காமல் கொடுத்ததை இன்றளவும் என்னால் மறக்க முடியாது.

காமராஜர் போல் நிறைய காமராஜர்கள் என் வாழ்வில் வந்து கல்வி விளக்கேற்றி வைத்தார்கள்.  அவர்கள் ஒவ்வொருவரையும் இந்த நேரத்தில் நினைத்து கண்ணீர்மிக   நன்றி கூறிக் கொள்கிறேன். அவர்கள் இல்லையென்றால் நான் இந்த நிலையில் இல்லை.

 கல்லூரி முடிக்கும் வரை விளக்கு வெளிச்சத்தில்தான் படித்தேன்... சம்பாதிக்க ஆரம்பித்த பிறகுதான் எங்கள் வீட்டு  வறுமை போய் ஓரளவு மூச்சு பிடிக்க முடிந்தது.  அதன் பிறகே மின்சார வசதியுள்ள வீட்டுக்கு மாறினோம். அதன் பிறகே எங்கள் வாழ்வு ஒளிமயமானது.

சாரி ரொம்ப போரடிச்சுட்டேன்....

 

Tuesday, September 6, 2011

தல 50 மங்காத்தா ஆட்டம்

அஜித் படம் பார்த்து ரொம்ப நாள் ஆச்சு..ரெட், கிரீடம், ஏகன் என்று பார்த்து நொந்து போய் அஜித் படமே பார்ப்பதில்லை என்று முடிவு எடுத்திருந்தேன்.  பில்லா பார்த்து கொஞ்சம் நொந்தும் கொஞ்சம் பரவவில்லை என்றும் இருந்தேன்.


ஞாயிறு மங்காத்தா பார்க்க வேண்டிய கட்டாயமாயிற்று.....
ஏற்க்கனவே நிறைய பேர் விமர்சனம் எழுதி கதை எல்லாம் எழுதி விலாவாரியாக எல்லோரும் படித்துவிட்டதினால் நான் கதையைப் பற்றி சொல்லப் போவதில்லை.

படத்தைப் பற்றி...

ஒரு பஞ்ச் வசனம் இல்லை, கைமுட்டிகள் முறுக்குவதில்லை, நரம்பெல்லாம் புடைத்து  கண்களெல்லாம் சிவப்பதில்லை -ஒரே ஆச்சர்யம் இது அஜித் படமா என்று!

எந்த ஒரு ஹீரோவும் நடிக்கத் தயங்கும் பாத்திரம்.  இமேஜ் பார்க்காமல் நடித்திருக்கிறார் அஜித்.  அதற்கே ஒரு hats off சொல்லலாம்.  வில்லத்தனமான கேரக்டர்... அல்வா மாதிரி நடித்திருக்கிறார்.

டைட்டில் வித்தியாசமாக இருக்கிறது.  இடைவேளை வரை மெதுவாகப் போய் அப்புறம் ஸ்பீட் பட்டையைக் கிளப்புகிறது.

இப்போது கிரிகெட் இந்தியாவுக்கு வேண்டுமானால் சொதப்பலாம்..ஆனால் வெங்கட் பிரபுவுக்கு எப்போதும் அது கை கொடுத்திருக்கிறது.  சென்னை-28 , சரோஜா, இப்போ மங்காத்தா.

நிறைய கேரக்டர்கள்... இடைவேளை வரை புதிது புதிதாக நிறைய வருகிறார்கள்.  திர்ஷா, லக்ஷ்மி ராய், ஆண்ட்ரியா, ஜயபிரகாஷ், மகாத், வைபவ், பிரேம், அரவிந்த்,அஷ்வின் , அர்ஜுன், சுப்பு பஞ்சு, அஞ்சலி, இப்படி இன்னும் நிறைய...ஆனால் இவர்கள் அத்தனை பெரும் படத்தின் பின் பாதியில் வருவதால் அறிமுகம் அவசியமாகிறது.  முன்பாதியில் நிறைய சொதப்பல்கள் என்று நாம் நினைப்பதெல்லாம் இறுதியில் அழகாக அவி்ழ்த்துவிடுகிரார்கள்.
நல்ல திரைக்கதை.  வெல்டன் வெங்கட்.



தல 50 என்று கேப்சன் கொடுத்துவிட்டதால்தானோ என்னவோ அவ்வப்போது ஒரே பிரேமில் நிறைய அஜித் வருவது மாதிரி ஷாட் வைத்திருக்கிறார்கள்.  ஒரு பாட்டில் பின்புலங்கள் மாறுவது அழகாக இருக்கிறது.  வெங்கட்டும் ஷங்கர் மாதிரி சிந்திக்க ஆரம்பித்து விட்டார்.

யுவன் ஒரு பாட்டு எழுதி இருக்கிறார்.  கவிஞர் அவதாரம் எடுத்து விட்டார்.  வாழ்த்துக்கள் யுவா.  பாட்டுகளும் பரவாயில்லை.

பார்ட்டி , தண்ணி அடிப்பது,  காலையில் ஹாங்ஓவர். தண்ணியே அடிப்பதில்லை என்று ஒரு சபதம் எடுப்பது... அனுபவித்து காட்சிபடுத்தி இருக்கிறார் வெங்கட்.

பில்லாவில் முதல் காட்சி.  ப்ளைட்டில் இறங்கி வரும் அஜித் படி மேல் நின்று தலையை லெப்ட்-ரைட் திருப்பி ஒரு லுக் விடுவாரே... அதே மாதிரி இதுலயும் ஜீப்பை விட்டு இறங்கி தலையை திருப்பி திருப்பி பார்க்கிறார்.  தல என்றால் அப்படித்தானோ!  அதனால் தன தல என்று பேரோ!

அதென்ன சால்ட் அண்ட் பெப்பர் லுக்கு...இமேஜை உடைக்கனும் என்று கங்கணம் கட்டி வேலை செய்த மாதிரி இருக்கிறது.  நாப்பது வயதென்று உண்மை வேறு சொல்கிறாராம். கதைக்கு இது தேவையே இல்லை.  அதுவுமில்லாமல் எந்தப் பெண் நாப்பது வயசுக் காரரை லவ் பண்ணுகிறது.  அப்படி யாராவது இருந்தா கையை தூக்குங்க.  அவ அப்பங்காரன் வந்து கையை வேட்டீருவான் ஜாக்கிரதை.

அஜித் பைக் ரேசில் செய்யத் தவறியதை ஒரு சேசிங் காட்சியில் வீலிங் எல்லாம் பண்ணி அமர்க்களப் படுத்துகிறார்.  டூப்பா அலது அஜீத்தே தானா என்று தெரியவில்லை.

பிரேம்ஜி பரவாயில்லை.  நன்றாகவே செய்திருக்கிறார்.  எவ்வளவோ செய்திருக்கிறார், இதை செய்ய மாட்டாரா?

மங்காத்தா-  மங்காத ஆத்தா!