PLEASE CLICK HERE TO VIEW IN YOUR LANGUAGE

Thursday, May 24, 2012

உருமி-சந்தோஷ் சிவனின் கூர்மையான ஆயுதம்


சந்தோஷ் சிவனின் உருமி நாளை வெளியாகிறது. நான் இந்தப் படத்தை மலையாளத்தில் பார்த்து எழுதிய விமர்சனத்தை இப்போது மீள்பதிவு செய்கிறேன்.


வாஸ்-கோட-காமா என்றொரு அறிஞர்..அவர் ஒரு கடல் வழி பயணி... அவர் அரபிக்கடலோரம் வந்து கால் பதித்து இந்தியாவை உலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டினார். அவர் நல்லவர், வல்லவர், நிறைய நாடுகளை கஷ்டபட்டு கண்டுபிடித்தார். என்றெல்லாம் நாம் பாட புத்தகங்களில் படித்திருக்கிறோம்.  அப்படியொரு இமேஜை தலை கீழாகப் புரட்டிப்போட்டிருக்கும் படம்- உருமி எனும் மலையாளப் படம். சந்தோஷ் சிவனின் இயக்கத்தில் ப்ரிதிவ்ராஜ், பிரபுதேவா, நம்ம ஆர்யா நடித்திருக்கும் படம்.


கி.பி.1498 வாஸ்கோடகாமா நான்கு கப்பல்களில் தன் சகாக்களுடன் ஆப்பிரிக்காவில் கால் பதித்து அவர்களை வென்ற பிறகு அங்கேயிருந்த குஜராத்தி மாலுமியை சிறை பிடித்து காலிகட் நோக்கி பயணம் ஆகிறான். கேரளாவில் தன்கால் தடம் பதிக்கிறான். அங்கேயிருந்த மிளகைக் கண்டு ஆச்சர்யம் அடைகிறான். அதற்காக மூன்று மடங்கு விலை தர முன்வந்தும் கேரள ராஜா செம்பூதிரி வணிகத்துக்கு மறுக்கிறார். ஆனால் தனது நாட்டுக்கு திரும்பிச் சென்ற வாஸ்கோ 1502-ல் மிளகின் மேல் மாறாத காதல் கொண்டு மீண்டும் பெரும் படையோடு வருகிறான். வரும் வழியில் நானூறு பேரோடு மெக்கா சென்று வரும் நான்கு முஸ்லிம் கப்பல்களை பிடித்து வைத்துக் கொள்கிறான்.

இதை கேள்விப்பட்ட ராஜா கொத்துவால் (நம்ம ஆர்யா) ஒரு நம்பூதிரியை தனது எழு- எட்டு வயதான மகனோடு சமாதானம் பேச தூதனுப்புகிறான்.  ஆனால் அந்த நம்பூதிரியின் நாக்கை அறுத்து, மற்றொரு நாயின் காதை  அறுத்து நம்பூதிரியின் காதோடு தைக்கப் படுகிறது. இதைகேள்விப் பட்ட கொத்துவால் கப்பலில் புகுந்து வாஸ்கோ-வைத் தாக்குகிறான். வாஸ்கோ தப்பித்துவிட கொத்துவால் கொல்லப்படுகிறான். இதைக் கண்ட கொத்துவாலின் மகன் கேளு கடலில் குதித்து தப்பிக்க கப்பல் தீ வைக்கப்பட்டு   எல்லோரும் கொல்லப் பட்டிருக்கிறார்கள்.

ஒரு பெண் இறக்கும் தருவாயில்விட்டுச் சென்ற நகைகளை தனது முஸ்லிம் நண்பனுடன் சேர்ந்து அதை உருக்கி வாஸ்கோவை கொல்ல ஆயுதம் செய்கிறான். அதுதான் உருமி. நம்ம ஊர் சுருள் கத்தி. எம்.ஜி.ஆர். சில படங்களில் சண்டை போடுவாரே...அது மாதிரியான ஆயுதம். அதை வைத்துக்கொண்டு கேளு(பிரிதிவி ராஜ்)பெரியவனான பிறகு அதே வாஸ்கோ-வை தனது முஸ்லிம் நண்பன் கவ்வாலி(பிரபு தேவா), போர்த்துகீசியர்களை பழி வாங்கும் எண்ணம் கொண்ட அரக்கல் ஆயிஷா(ஜெனிலியா) ஆகியோரோடு எதிர்த்து சண்டை போட்டு வாஸ்கோவை வென்றார்களா? இல்லையா? என்பதுதான் கதை.


இது உருமிக்கும் தீத்துப்பி(துப்பாக்கி)க்குமான சண்டை.


கதை-திரைக்கதை-வசனம்-சங்கர் ராமகிருஷ்ணன்.  அழகாக வடிவமைத்திருக்கிறார்.  சரித்திரத்தின் ஒரு துளி உண்மையை எடுத்துக்கொண்டு கதையை பின்னிய விதம் அருமையோ அருமை.  அதில் காட்டிக் கொடுக்கும் எட்டப்பன்களும் விசுவாசத்துக்கு விலை போன தியாகங்களும் அமைத்து கமர்சியல் கதையாக  கையாண்ட விதம் அருமை.
சந்தோஷ் சிவன்- அவருடைய கேமராவிற்கு எங்கிருந்துதான் காட்சிகள் கிடைக்கிறதோ... ஒவ்வொரு பிரேமும் மனதை அள்ளுகிறது. பசுமை, வானம், தண்ணீர், மலை எல்லாவற்றையும் கூடுதல் அழகோடு காட்டுகிறது. கொட்டும் அருவியின் ஒரு முனையில் இருந்து பிருதிவியும் மறுமுனையில் நின்று ஜெனிலியாவும் லுக் விட்டுக்கொள்ளும் சீன் கிளாஸ். இதை ராவணனில் பார்த்திருந்த போதும் சலிக்கவில்லை.

வித்யாபாலன் வரும் ஒரு பாடல் ஒளிப்பதிவு விளையாடுகிறது. சந்தோஷ் சிவனின் டைரக்சன் துல்லியமாக உள்ளது. துப்பாக்கியின் வருகையை அழகாக சொல்லியிருக்கிறார். ஒவ்வொரு சீனையும் செதுக்கி எடுத்திருக்கிறார் படத்தின் நீளம் ஏறக்குறைய மூன்று மணி நேரம் அதிகம் தான். எடிட்டிங்கில் கொஞ்சம் ஷார்ப் பண்ணியிருந்தால் இன்னும் நன்றாக வந்திருக்கும். பழமையையும் புதுமையையும் லிங்க் செய்த விதம் புதுமையாக உள்ளது. மணிரத்னம் பாதிப்பு.

சண்டைக் காட்சிகள் நன்றாகவே உள்ளது. அனல் அரசு அசர அடித்திருக்கிறார். ஜெனிலியாவை நன்றாகவே கொடுத்த காசுக்கு மேலாகவே வேலை வாங்கியிருக்கிறார்கள். அழகாக ஸ்லோ மோஷனில் சண்டை போடும் அழகே தனி. ஜெனிலியாவின் அப்பாவியான அசடான  டெம்ப்ளேட்-ஐ இதில் உடைத்துள்ளார்.

நித்யா மேனன் ப்ரெஸ்நெஸ் நன்றாக இருக்கிறது. சில இடங்களில் நடிக்கவும் செய்திருக்கிறார். ஜெகதி பாபுவின் நடிப்பு நன்றாக உள்ளது. அவரின் நெளிவும், சுளிவும் அருமையான பாடி லாங்வேஜ்.


பிரிதிவிராஜ், பிரபுதேவாவும் நன்றாக நடித்திருக்கிறார்கள். பிரபுதேவாவை காட்சியின் இறுக்கத்தை உடைக்க நன்றாகவே பயன்படுகிறார். ஆர்யா நான் கடவுள் ஜுரத்தில் இருந்து இன்னும் மீளவில்லை போலும்-இருப்பினும் ரசிக்கும்படியாகவே செய்திருக்கிறார்.

பழங்கால மலயாளம் நன்றாக புரியும்படி உள்ளது. ஏறக்குறைய தமிழ்தான்.

இன்னும் நன்றாக செதுக்கி இழைத்து தமிழுக்கு கொண்டு வாருங்கள் சந்தோஷ்...ஜெயித்துவிடலாம்.

படம் - பார்க்கலாம் - பார்க்கவேண்டும்.

Friday, May 11, 2012

ஒரு சாப்பாட்டுராமனின் காதல் கவிதை!



உன் கண்கள்
ஒரு அழகான
ஆப்பாயில்!
வெள்ளைப் புறவிழியின்
நடுவே இருக்கும்
வெந்தும் வேகாத
மஞ்சள் கருவிழி!
ஐந்து விரல்களில்
அப்படியே சுருட்டி
ஒழுகி முடிவதற்குள்
உள்ளே விடத் தோணுதடி!

கொஞ்சம் பெப்பர்
தூவிய
உன் கோபப் பார்வைதானடி
ஆப் அடிக்க 
நல்ல இணையான சைட்டிஸ்!



உன் மெத்தென்ற
கன்னங்கள் இரண்டும்
நீலகிரி பேக்கரியின்
சூடான 'பன்'னுகள்!
நாயர்கடை
டீ வாங்கி
நனைத்துத் தின்ன
உந்தன் பன்னு கன்னங்களை
இரவல் தருவாயா?




அவ்வப்போது வரும்
என் சிறுநீரகப் பிரச்சனைக்கு
உந்தன் வாழைத் தண்டு
கால்களைத் தருவாயா
சூப் வைத்து குடித்து
நிரந்தர நிவாரணம் பெறுகிறேன்!










உன் குடை மிளகா மூக்கை
சற்றே மறைத்து வை
பஜ்ஜிக்கடை பாய்
உன்னைத்தான்
தேடிக்கொண்டிருக்கிறார்!









உன் பலாச்சுளை
காதுகளோடு
கேரளா பக்கம்
போய்விடாதே...
சிப்ஸ் போட்டு
விற்றுவிடுவார்கள்!








உன் மாதுளை பற்களை
காட்டி
அடிக்கடி சிரிக்காதே...
மிக்சியோடு
ஜூஸ் கடைக்காரன்
உன் பின்னாடியே
அலைந்துகொண்டிருக்கிறான்!









உன் இதழோரம்
வழியும் திராட்சை ரசத்தை
சேமித்து
டாஸ்மாக் பாருக்கு
அனுப்பி வை
எந்தன் ஜொள்ளும்
உந்தன் ஜொள்ளும்
கலந்த கலவையில்
புதியதொரு
போதை மிகுந்த
மதுபானம் செய்வோம்!