PLEASE CLICK HERE TO VIEW IN YOUR LANGUAGE

Wednesday, January 23, 2013

தேங்கா மாங்கா பட்டாணி சுண்டல்-3

எய்ட்ஸ் எனும் மாய நோய்.

சில மாதங்களுக்கு முன்பு நண்பர் சங்கர் ஒரு குறும்படம் எடுத்தார். அது எய்ட்ஸ் பற்றிய மெசேஜ் கொண்ட ஒரு திரில்லர் படம்.  அந்தப் படத்திற்காக ஒரு மேன்சன் பில்டிங் வேண்டும் என்று கேட்டார். நான் ஒரு நண்பரிடம் உதவி கேட்டேன். அவரும் அவர் தங்கியிருந்த மேன்சன் முதலாளியிடம் அனுமதி பெற்ற பின்னர் எங்களை வரச் சொன்னார்.

நாங்களும் தட்டுமுட்டுச் சாமான்களோடு கொஞ்ச நேரத்தில் ஆஜர் ஆனோம். ஒரு ரூமைக் கைப்பற்றி அதை தங்கள் வசம் ஆக்கிகொண்டனர் படப்பிடிப்பு குழுவினர். எல்லா ஏற்பாடுகள் முடிந்து காமிரா கோணம் பார்த்து நடிப்பு ஒத்திகை பார்த்துக்கொண்டிருந்தனர்.

அப்போது அந்த மேன்சன் முதலாளி வந்தார். டைரக்டரை அழைத்து கதையைக் கேட்டார். டைரக்டர் சங்கரும் ரொம்பவும் சின்சியராக அவரை அமர வைத்து முக பாவங்களோடு கதை சொல்லிக்கொண்டு இருந்தார். கதையில் எய்ட்ஸ் என்ற வார்த்தை வந்ததுமே போதும் என்று சொன்னவர் உடனே 'பேக்கப்' சொல்லிவிட்டார். டைரக்டர் பிதுக் பிதுக் என்று முழிக்கிறார். என்னடா நாம் சொல்லவேண்டிய வார்த்தையை இவர் சொல்கிறாரே என்று அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்கிறார்.

நாங்கள் அவரை சமாதானப் படுத்தும் நோக்கத்தில் சென்று அவரிடம் பேசினால்,  அவர் நாங்கள் சொல்வதை காதில் வாங்கிக்கொள்ளவே இல்லை.

"இல்லைங்க இந்த மாதிரி படம் இங்க எடுக்கக் கூடாது" -என்று கீறல் ரெக்கார்ட் மாதிரி இதையே திருப்பி திருப்பி சொன்னார்.

நாங்களும்,"உங்ககிட்ட அனுமதி வாங்கித்தானே நாங்கள் இங்கே வந்தோம்?" என்றோம்.

"நான் ஏதோ சின்னப் பசங்களுக்கு படம் எடுக்கறீங்கன்னு நினைச்சேன்"-என்றார்.

எவ்வளவோ பேசிப்பார்த்தும் ஒன்றும் நடக்கவில்லை. எங்களை வெளியே அனுப்பி கதவைச் சாத்திவிட்டுத்தான் சென்றார்.

எய்ட்ஸ் என்றால் இவ்வளவு விழிப்புணர்வா(?) என்று ஆச்சர்யப்பட்டோம்!!!!

Tuesday, January 22, 2013

புத்தகக் கண்காட்சிப் போட்டியா.. தேர்த் திருவிழாவா?

புத்தகக் கண்காட்சிப் போட்டியா.. தேர்த் திருவிழாவா?

திருப்பூர் புத்தகத் திருவிழா 2013-ஐ ஒட்டி சென்ற ஞாயிற்றுக்கிழமை பள்ளிக் குழந்தைகளுக்கான கலை இலக்கியத் திறனாய்வுப் போட்டிகள் திருப்பூரில் நடைபெற்றன.  

இந்த நிகழ்வுக்கு சேர்தளம் சார்பில் நானும் சென்றிருந்தேன்.  நான் போன வருடம் மாதிரி சாதாரணமாக இருக்கும் என்று எண்ணி இருந்தேன்.  ஆனால் அங்கு சென்ற பிறகுதான் தெரிந்தது,  மிகப் பிரமாண்டமான கூட்டம் கூடி இருந்தது.  

குழந்தைகளுக்கான ஓவியப்போட்டிக்கென்று சுமார் ஆறாயிரம் பேர் திரண்டிருந்தனர்.  அவர்களனைவரையும் ஒருங்கிணைத்து அமரவைத்து ஓவியம் வரையவைத்து அனுப்புவதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது.  
ஒவ்வொரு குழந்தையின் பெற்றோர்களும் ஆர்வத்துடன் குழந்தையோடு பங்கேற்று ஒரு தேர்த் திருவிழாவுக்கு வந்த சந்தோசத்தில் சென்று கொண்டிருந்தார்கள்.

இவ்வளவு கூட்டத்தை சேர்த்த புத்தகத் திருவிழா குழுவினருக்கு நிச்சயம் பாராட்டுகளைத் தெரிவிக்கவேண்டும்.  ஒவ்வொரு பள்ளியிலிருந்தும் அவர்களின் சீருடையோடு பேருந்தில் அழைத்து வந்திருந்தார்கள்.  

இத்தனை ஆர்வம் எப்படி வந்தது என்று பார்த்தால்  இப்போது இருக்கும் சமச்சீர் கல்வியே காரணம் என்றே தெரிந்தது.  இந்தக் கல்வி திட்டத்தில் மாணவர்களின் தனி மனிதத் திறமையை வெளியே கொண்டு வருகிறார்கள் என்பது உண்மை.


எனது பையன் படிக்கும் மெட்ரிக் பள்ளியில் கூட சமச்சீர் கல்விதான்.  ஒரு நாள் ரீசைக்ளிக் பொருள்களில் ஏதாவதொரு உபயோகமான பொருளைச் செய்து வரச் சொன்னார்கள்.  கவிதை எழுதச் சொன்னார்கள்.  நாடகம் போடச் சொன்னார்கள்.  தொலைகாட்சி நல்லதா கேட்டதா என்று பட்டிமன்ற விவாதம் செய்யச் சொன்னார்கள்.   ஒவ்வொருவரும் இரண்டு நிமிடம் ஒரு பொருளைப் பற்றி பேசச் சொன்னார்கள்.  ஓவியம் வரையச் சொன்னார்கள்.  ஒரு தலைப்பைக் கொடுத்து அதைப் பற்றிய தகவல் சேகரிக்கச் சொன்னார்கள்.  வீட்டைச் சுற்றியுள்ள மருத்துவ குணம் வாய்ந்த மூலிகைகளை சேகரித்து எடுத்து வரச் சொன்னார்கள்.  இதற்க்கெல்லாம் ஒரு மதிப்பெண் கொடுத்து மாணவர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்துகிறார்கள்.


நிச்சயமாகச் சொல்கிறேன்.. சத்தமில்லாமல் ஒரு தலைமுறை நல்லமுறையில் உருவாகிக்கொண்டிருக்கிறது.  அதற்கான அடையாளமே இவ்வளவு கூட்டம் கூட்டமாக ஒரு போட்டியில் கலந்துகொண்டிருக்கிறார்கள்.

இத்தனை கூட்டமும் புத்தகக் கண்காட்சிக்கு வருமேயானால் புத்தகத் திருவிழா நிச்சயம் தேர்த் திருவிழாவாக மாறும்...பிரமாண்ட வெற்றி பெறும் என்பதில் சந்தேகமில்லை.


கவிதைப்போட்டியில் சில சுவராஷ்யங்கள்..
நான் கவிதை எழுதிய தாள்களை சேகரிக்கும் பணியில் இருந்ததால் சில கவிதைகளை படிக்கும் பாக்கியம் கிடைத்தது....

ஒரு பையன் 'மங்காத தமிழென்று சங்கே முழங்கு" என்று பாரதிதாசன் கவிதையை அப்படியே எழுதி இருந்தான்.
இன்னொருவனோ அழகான கையெழுத்தில் 'வெள்ளிப்பனி மலை மீதுலாவுவோம்" என்று பாரதியாகி இருந்தான்.  இன்னொருவன் வெற்றி நிச்சயம் என்று அண்ணாமலை பாட்டை அப்படியே எழுதி இருந்தான்.  ஒரு பள்ளியில் இருந்த வந்த நான்கு பேரும் ஒரே மாதிரி கவிதை எழுதி  வரி மாறாமல் எழுத்துப் பிழைகூட மாறாமல் எழுதி இருந்தார்கள்.

கலாய்ப்பதற்கேன்றே வருவார்கள் போலிருக்கிறது.   
 

Monday, January 21, 2013

தேங்கா மாங்கா பட்டாணி சுண்டல்-2.


ப்ளாக் பக்கம் தலைகாட்டி வெகு நாளகி விட்டது. உள்ளுக்குள் ஒரு குற்ற உணர்ச்சி இருந்துகொண்டே இருந்தது.  அதுதான் மூக்கையாவது காட்டிவிட்டுப் போகலாம் என்று வந்திருக்கிறேன்.

எனது ரசிகர் பட்டாளம்(?) வேறு எழுது எழுது என்று ஒரு நாளைக்கு இருபத்தைந்து மணி நேரமும் கெஞ்சிக் கொண்டிருப்பதால் எழுத வேண்டிய கட்டாயம் இருக்கிறது.  ஆகையால்.... இனி நான் உங்களை விடமாட்டேன்.

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்..


எங்களது வீட்டில் எப்போதும் ரகளைதான்.  யாராவது ஒருத்தர் பல்ப் வாங்கிக் கொண்டிருப்போம்.

நேற்று காலை டிபன் நேரம்.  தங்கமணி தோசை வார்த்து போட்டுக்கொண்டிருந்தாள். நெடு நாட்களாக எங்களுக்கு வைக்கப் படுகிற சில  தோசைகளில் நடுவில் வட்டமாக உள்ளங்கை அளவில் ஒரு சிறிய பாகம் காணாமல் போய் இருக்கும்.  அது எப்படி என்று எனக்கு ஆச்சர்யமாக இருக்கும்.  இருந்தபோதும் தோசை ருசியாக இருப்பதாலும் முருகலாகவும் இருப்பாதால் கேள்விகள் கேட்பதில்லை.  மேலும் வாய் என்பது சாப்பிடத்தானே தவிர கேள்வி கேட்பதற்கு இல்லை என்பது எங்கள் வீட்டில் டைனிங் டேபிள் விதிகளில் ஒன்று.

இந்த விதியை மீறி அவ்வப்போது நாங்கள் பல்ப் வாங்கிக்கொள்வதும் உண்டு. எனது பிள்ளைச் செல்வங்களுக்கு தோசை முருகலாக இருந்தாக வேண்டும்.  ஆனால் கொஞ்சம் கூட தோசை தீய்ந்து கருகக்கூடாது.    எனது சின்னப் பையன் யுகாவுக்கு வைக்கப்பட்ட தோசையில் நடுவில் கொஞ்சம் கருகி இருந்தது. உடனே தட்டுக்கும் பூமிக்குமாக குதித்தான்.

உடனே சமையலறையில் இருந்து ஓடிவந்த தங்கமணி அடடா கருகிய பாகத்தை டெலீட் செய்யாம கொடுத்திட்டேனே என்றாள்.  அப்போதுதான் எங்களுக்கு நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் ரகசியம் புரிந்தது.

மகனோ, "ஏம்மா எனக்கு கருத்த தோசையை கொடுத்தே.  தூக்கி வெளியே போடவேண்டியதுதானே" -என்றான்.

தங்கமணி அவனை நிதானமாக முறைத்தபடி,  "அப்படியா... அப்படீன்னா முதல்ல உன்னைத்தான் தூக்கி வெளியே போட்டிருக்கணும்.  உன்னைப் பெத்தப்போ கருப்பா இருந்த்தன்னு  அப்பவே தூக்கிப் போட்டிருக்கணும்"-என்றாள்.

அவ்வளவுதான்.  கப்சிப்.  டைனிங் டேபிள் விதி தன்னால் அமுலுக்கு வந்தது.
நான்,"செவ்வாழ வாயை வெச்சுட்டு கம்முன்னு இருடானா கேக்கிறியா?"-என்று சொன்னேன்...(மனசுக்குள்தான்!!!!).


வாழ்கையில் நல்லா...
கனவுகள்  சுவராஸ்யமானவை. அதுவும் எனக்கு வரும் கனவுகள் அவ்வப்போது ஒரு குறும்படத்துக்கான கருவைத் தந்திருக்கின்றன.  போனவாரம் வந்த கனவு அற்புதமானது.

நடு இரவு நேரம்.  ஒரு மெயின் ரோட்டில் நடு ரோட்டில் உட்கார்ந்து நாலைந்து நண்பர்கள் பேசிக்கொண்டிருகிறோம். அதில் ஒரு பையன் இருக்கிறான். அந்தப்  பையனுக்கு அறிவுரை சொல்லிக்கொண்டிருக்கிறேன்.  நான்,"வாழ்க்கையில் அடிபட்டாத்தான் உயரமுடியும்டா.  எவ்வளவு அடிபடுகிறோமா அவ்வளவு அனுபவம் கிடைத்து நல்ல உயரத்துக்கு வளர முடியம்"-என்கிறேன்.

அப்போது நெடுஞ்சாலை போலீஸ் ரோந்து வருகிறது.  நாங்கள் நடு ரோட்டில் உட்கார்ந்து அரட்டை அடிப்பதைப் பார்த்து எங்களை மிரட்டி அனுப்புகிறது.  எல்லோரும் விலகிவிட அந்தப் பையன் மட்டும் அங்கேயே நிற்கிறான்.  எதிர்த்து பேசுகிறான்.  போலீஸ் அவனை நாலு மிதி மிதித்து அனுப்புகிறது.  நாங்கள் அவனை சூழ்ந்து "ஏண்டா அடி வாங்கினே... பேசாம வரவேண்டியதுதானே"-என்று கேட்கிறோம்.  அவனோ,"நீங்கதானே  அடிபட்டாதான் முன்னேறமுடியும்னு சொன்னீங்க.  அதனாலதான்!"-என்கிறான்.  கட்.  கனவு கலைகிறது.

இன்னும் நிறைய கனவுகள் இருக்கிறது... பிறகு பகிர்கிறேன்.


பிரியாத ப்ரியங்களுடன்...