PLEASE CLICK HERE TO VIEW IN YOUR LANGUAGE

Tuesday, January 22, 2013

புத்தகக் கண்காட்சிப் போட்டியா.. தேர்த் திருவிழாவா?

புத்தகக் கண்காட்சிப் போட்டியா.. தேர்த் திருவிழாவா?

திருப்பூர் புத்தகத் திருவிழா 2013-ஐ ஒட்டி சென்ற ஞாயிற்றுக்கிழமை பள்ளிக் குழந்தைகளுக்கான கலை இலக்கியத் திறனாய்வுப் போட்டிகள் திருப்பூரில் நடைபெற்றன.  

இந்த நிகழ்வுக்கு சேர்தளம் சார்பில் நானும் சென்றிருந்தேன்.  நான் போன வருடம் மாதிரி சாதாரணமாக இருக்கும் என்று எண்ணி இருந்தேன்.  ஆனால் அங்கு சென்ற பிறகுதான் தெரிந்தது,  மிகப் பிரமாண்டமான கூட்டம் கூடி இருந்தது.  

குழந்தைகளுக்கான ஓவியப்போட்டிக்கென்று சுமார் ஆறாயிரம் பேர் திரண்டிருந்தனர்.  அவர்களனைவரையும் ஒருங்கிணைத்து அமரவைத்து ஓவியம் வரையவைத்து அனுப்புவதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது.  
ஒவ்வொரு குழந்தையின் பெற்றோர்களும் ஆர்வத்துடன் குழந்தையோடு பங்கேற்று ஒரு தேர்த் திருவிழாவுக்கு வந்த சந்தோசத்தில் சென்று கொண்டிருந்தார்கள்.

இவ்வளவு கூட்டத்தை சேர்த்த புத்தகத் திருவிழா குழுவினருக்கு நிச்சயம் பாராட்டுகளைத் தெரிவிக்கவேண்டும்.  ஒவ்வொரு பள்ளியிலிருந்தும் அவர்களின் சீருடையோடு பேருந்தில் அழைத்து வந்திருந்தார்கள்.  

இத்தனை ஆர்வம் எப்படி வந்தது என்று பார்த்தால்  இப்போது இருக்கும் சமச்சீர் கல்வியே காரணம் என்றே தெரிந்தது.  இந்தக் கல்வி திட்டத்தில் மாணவர்களின் தனி மனிதத் திறமையை வெளியே கொண்டு வருகிறார்கள் என்பது உண்மை.


எனது பையன் படிக்கும் மெட்ரிக் பள்ளியில் கூட சமச்சீர் கல்விதான்.  ஒரு நாள் ரீசைக்ளிக் பொருள்களில் ஏதாவதொரு உபயோகமான பொருளைச் செய்து வரச் சொன்னார்கள்.  கவிதை எழுதச் சொன்னார்கள்.  நாடகம் போடச் சொன்னார்கள்.  தொலைகாட்சி நல்லதா கேட்டதா என்று பட்டிமன்ற விவாதம் செய்யச் சொன்னார்கள்.   ஒவ்வொருவரும் இரண்டு நிமிடம் ஒரு பொருளைப் பற்றி பேசச் சொன்னார்கள்.  ஓவியம் வரையச் சொன்னார்கள்.  ஒரு தலைப்பைக் கொடுத்து அதைப் பற்றிய தகவல் சேகரிக்கச் சொன்னார்கள்.  வீட்டைச் சுற்றியுள்ள மருத்துவ குணம் வாய்ந்த மூலிகைகளை சேகரித்து எடுத்து வரச் சொன்னார்கள்.  இதற்க்கெல்லாம் ஒரு மதிப்பெண் கொடுத்து மாணவர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்துகிறார்கள்.


நிச்சயமாகச் சொல்கிறேன்.. சத்தமில்லாமல் ஒரு தலைமுறை நல்லமுறையில் உருவாகிக்கொண்டிருக்கிறது.  அதற்கான அடையாளமே இவ்வளவு கூட்டம் கூட்டமாக ஒரு போட்டியில் கலந்துகொண்டிருக்கிறார்கள்.

இத்தனை கூட்டமும் புத்தகக் கண்காட்சிக்கு வருமேயானால் புத்தகத் திருவிழா நிச்சயம் தேர்த் திருவிழாவாக மாறும்...பிரமாண்ட வெற்றி பெறும் என்பதில் சந்தேகமில்லை.


கவிதைப்போட்டியில் சில சுவராஷ்யங்கள்..
நான் கவிதை எழுதிய தாள்களை சேகரிக்கும் பணியில் இருந்ததால் சில கவிதைகளை படிக்கும் பாக்கியம் கிடைத்தது....

ஒரு பையன் 'மங்காத தமிழென்று சங்கே முழங்கு" என்று பாரதிதாசன் கவிதையை அப்படியே எழுதி இருந்தான்.
இன்னொருவனோ அழகான கையெழுத்தில் 'வெள்ளிப்பனி மலை மீதுலாவுவோம்" என்று பாரதியாகி இருந்தான்.  இன்னொருவன் வெற்றி நிச்சயம் என்று அண்ணாமலை பாட்டை அப்படியே எழுதி இருந்தான்.  ஒரு பள்ளியில் இருந்த வந்த நான்கு பேரும் ஒரே மாதிரி கவிதை எழுதி  வரி மாறாமல் எழுத்துப் பிழைகூட மாறாமல் எழுதி இருந்தார்கள்.

கலாய்ப்பதற்கேன்றே வருவார்கள் போலிருக்கிறது.   
 

No comments :

Post a Comment

குதிரையை தோள் வருடி தட்டிக் கொடுங்கள்...அது என்றென்றும் உங்களை மறக்காது......